தென்னை மரம் சாய்ந்து மருந்து கடை உரிமையாளர் பலி மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்


தென்னை மரம் சாய்ந்து மருந்து கடை உரிமையாளர் பலி மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 3 Dec 2018 4:30 AM IST (Updated: 3 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது தென்னை மரம் சாய்ந்து மருந்து கடை உரிமையாளர் உயிரிழந்தார். அவரது நண்பர் காயம் அடைந்தார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள ஆலத்தூர் பாம்பளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது40). இவர் பேரளம் வாய்க்கால் கரை தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு ஹரிணி(12) என்ற மகளும், ஹரீஷ் (10) என்ற மகனும் உள்ளனர்.

சரவணன் நேற்று பேரளத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்தார்.

ராயதோப்பு என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்து ஒரு தென்னை மரம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது சாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேல்முருகன் லேசான காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த பேரளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் மருந்து கடை உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story