பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்


பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 2 Dec 2018 10:15 PM GMT (Updated: 2 Dec 2018 8:17 PM GMT)

பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசம் ஆனது.

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே கோடேபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 50). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் வீட்டின் அருகே உள்ளது. இந்த தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டு உள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் வெளியேறின.

இந்த யானைகள் அருணாச்சலம் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை மரங்களை முறித்து நாசம் செய்து கொண்டு இருந்தது. அப்போது யானையின் பிளிறல் சத்தம்கேட்டு தோட்டத்தின் அருகே உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த அருணாச்சலம் திடுக்கிட்டு எழுந்தார்.

பின்னர் அவர் அக்கம் பக்கத்துக்கு விவசாயிகளை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு யானைகள் வாழைகளை முறித்து தின்று கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனை கவனித்த விவசாயிகள் பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்ரோ‌ஷம் அடைந்த யானைகள் விவசாயிகளை நோக்கி ஓடி வந்தது. இதனால் விவசாயிகள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிகாலை 4 மணி அளவில் அந்த 2 யானைகளும் காட்டுக்குள் விரட்டப்பட்டன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி விவசாய நிலத்திற்குள் புகுந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி விட்டது. மேலும் வாழைகளை இழந்தவருக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வனத்துறையினர் அகழிகள் தோண்டி யானைகள் கிராமப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Next Story