திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி


திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 2 Dec 2018 10:30 PM GMT (Updated: 2 Dec 2018 8:47 PM GMT)

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குடிமங்கலம் பகுதியில் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடிமங்கலம்,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிலவிய கடும் வறட்சி காரணமாக குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் தண்ணீர் கிடைக்காத நிலை நீடித்தது. இதனால் பெரும்பாலான தென்னை விவசாயிகள் தண்ணீர் இல்லாததால் தென்னை மரங்களை காப்பாற்ற முடியாமல் போனது.

இந்த நிலையில் குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் முறையாக தூர்வாரப்படாததாலும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் குளம், குட்டைகள் வறண்டு போனதே நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்கான முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து குளம், குட்டைகளை தூர்வாரவும் நீர்வரத்து கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழித்தடங்களை சுத்தப்படுத்தவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரும்பாலான குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் போதிய நீர்வரத்து இல்லாமல் பெரும்பாலான குட்டைகள் வறண்டு கிடந்தன. மேலும் திருமூர்த்தி அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் விதமாகவும் திருமூர்த்தி அணையிலிருந்து குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து திருமூர்த்தி அணையிலிருந்து குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு குளம் நிரம்பினால் உபரிநீர் அடுத்த குளத்துக்கு செல்ல போதிய நீர்வழித்தடங்கள் இல்லாத நிலையிலும் தற்காலிக வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் குடிமங்கலத்தை அடுத்த கொங்கல் நகரம் குட்டை நிரம்பி சோமவாரப்பட்டி குட்டை நோக்கி சாலையோரத்தில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் சாலையோரத்தில் பாய்ந்து செல்லும் தண்ணீரை பார்த்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கால்நடைகளுக்காகவும், துணி துவைப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் அந்த தண்ணீரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


Next Story