அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் தானியங்கி சிக்னல் இல்லாததால் தாறுமாறாக செல்லும் வாகனங்கள் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் தானியங்கி சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. எனவே அங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர்–அவினாசி ரோட்டில் முக்கிய சந்திப்பாக அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பு உள்ளது. திருப்பூர், அவினாசி, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக அது உள்ளது. இதனால் அந்த பகுதியில் எந்த நேரமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அந்த சந்திப்பில் தானியங்கி சிக்னல் இருந்தது. அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் எளிதாக வெளியேறும் வகையில் பழைய சாலையை உயர்த்தி புதிய பாலம் கட்டப்பட்டது. இதனால் வாகனங்கள் வந்து திரும்பும் இடம் மாற்றப்பட்டது. இதன் காரணமாக ஏற்கனவே செயல்பட்டு வந்த தானியங்கி சிக்னலுக்கு அவசியம் இல்லாமல் போனது. தற்போது அந்த சிக்னல் பயனின்றி உள்ளது.
அதேநேரத்தில் முக்கிய சந்திப்பாக உள்ள அங்கு தானியங்கி சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அனுப்பர்பாளையத்தில் இருந்து 15 வேலம்பாளையத்திற்கு செல்லும் வாகனங்கள் சாலையை கடந்து சாலை விதிமுறையை மீறி ஒரு வழிப்பாதையில் செல்லும் நிலையில் உள்ளது.
இதேபோல் திருப்பூரில் இருந்து அவினாசி நோக்கி செல்லும் வாகனங்கள் பாலம் உள்ள பகுதியில் வேகமாக செல்வதால் சாலையை கடக்கும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்தை சரிப்படுத்துவதற்காக சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் குடையில் போக்குவரத்து போலீசார் நிற்பதும் இல்லை.
எனவே அந்த பகுதியில் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும், அங்கு தானியங்கி சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் முக்கிய சந்திப்பாக உள்ள அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பை சுற்றி போதுமான இடவசதி இருப்பதால் அங்கு ரவுண்டானா அமைத்தால் போக்குவரத்தை முறைப்படுத்துவதுடன், தாறுமாறாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தலாம் என்பதால் அங்கு ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.