காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து: கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் விடிய விடிய போராட்டம்


காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து: கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் விடிய விடிய போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 3 Dec 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினார்கள்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் தனியார் காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த காற்றாலைக்கு தேவையான உதிரி பாகங்கள் அனைத்தும் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதால், அதற்கு ஏற்றால் போல் அரசு இடங்களை ஆக்கிரமித்து பாதை அமைத்து கொண்டு சென்றனர். இதற்கு அந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அந்த பணி கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் லாரிகள் மூலம் உதிரி பாகங்கள் கொண்டு செல்லப்பட்டு பணிகள் தொடங்கியது. இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சுமார் 50 பேர், காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த போராட்டம் நேற்று மதியம் வரை தொடர்ந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் பூல்பாண்டி, துரைமுருகன், முத்துராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர் அதிகாரிகள், காற்றாலை அமைக்கப்பட்டு வரும் இடத்துக்கு சென்று, காற்றாலை நிறுவனத்திடம், மாவட்ட நிர்வாகம் அனுமதி தரும் வரை பணிகளை தொடர கூடாது. மேலும் இங்கு உள்ள வாகனங்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறினர். அதன் பின்னர் வாகனங்கள் வெளியேற்றப்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டன. அதேபோல் அருகே நடந்து வந்த மற்றொரு காற்றாலை பணியும் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story