ஊத்தங்கரை அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்


ஊத்தங்கரை அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து 14 பேர் காயம் அடைந்தனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நாப்பிராம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). நேற்று முன்தினம் இரவு இவர் ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மிட்டப்பள்ளி அருகே சென்ற போது அவருக்கு எதிரே திருவண்ணாமலையில் இருந்து ஊத்தங்கரை நோக்கி திருமண கோஷ்டியினர் வந்த வேன் வந்து கொண்டிருந்தது.

அந்த நேரம் திடீரென்று வேனின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் கிருஷ்ணனின் மோட்டார்சைக்கிள் மீது மோதிய வேன் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யா (45), ரஞ்சித் (14), பழனியம்மாள் (45), அம்மு (18), செல்வி (30), சம்பத் (30), திருப்பதி (40), தேன்மொழி (15), கோவிந்தன் (42), குப்புசாமி (55), தேவி (21), ராணி (45), ரமணி (10), கந்தன் (65) ஆகிய 14 பேர் காயம் அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணனும் காயம் அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து 14 பேர் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story