நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது


நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
x
தினத்தந்தி 3 Dec 2018 3:37 AM IST (Updated: 3 Dec 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

நில்வண்டே அணைக்கட்டு பணிக்காக ரூ.500 கோடியை வட்டியில்லா கடனாக ஷீரடி அறக்கட்டளை வழங்க உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்த நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், வருமானம் கொழிக்கும் ஷீரடி கோவில் அறக்கட்டளையிடம் இருந்து ரூ.500 கோடி வட்டியில்லா கடன் பெற மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கோவில் அறக்கட்டளையும் ஒப்புக்கொண்டுள்ளது.

பிரவாரா ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ள நில்வண்டே அணையில் நீர்சேமிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்த நீரை குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கு தேவையான இடது மற்றும் வலது கால்வாய்கள் இன்னும் கட்டப்படவில்லை.

இதை கட்டுவதற்காக தான் அறக்கட்டளை வழங்கும் கடன் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள கேபர்காவ், ராகுரி, ரகதா, அகோலே, சங்கம்நேர் தாலுகாக்கள் மற்றும் நாசிக் மாவட்டம் சின்னாரில் உள்ள 182 கிராமங்கள் பயன்பெறும் என்று தெரிகிறது. இது தொடர்பாக கோதாவரி-மரத்வாடா நீர்ப்பாசன மேம்பாட்டு கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ஷீரடி அறக்கட்டளை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய தொகையை வட்டியில்லாமல் கடனாக கோவில் அறக்கட்டளை வழங்கியது கிடையாது. கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு குறித்தும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே கோவில் அறக்கட்டளை சார்பில் ஷீரடியில் விமான நிலையம் அமைக்க மராட்டிய விமானநிலைய மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ.50 கோடி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது.

Next Story