வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் 4 பேர் கைது
வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள சேதுராமலிங்கபுரம் பகுதி வைப்பாற்றில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் அங்கு சப்–இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் நேற்று காலை சாதாரண உடையில் அங்கு சென்றனர். அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளுவது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரை கண்டதும் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடினர். ஆனால் அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். 4 பேர் தப்பியோடி விட்டனர். இதைதொடர்ந்து சங்கரன்கோவிலை சேர்ந்த வேல்முருகன்(வயது 35), அய்யனார்(23), கலிங்கப்பட்டியை சேர்ந்த திருப்பதி(35), சேதுராமலிங்கபுரத்தை சேர்ந்த ஞானகுருசாமி(35) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அங்கு நின்ற 4 லாரிகள், ஒரு ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.