நேரடி நியமனங்கள் அதிகரிப்பால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல் இழந்த நிலை
தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனங்கள் அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல் இழந்துவிட்ட நிலையில் அவற்றை போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களாக மாற்றினால் படித்த இளைஞர்களுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
விருதுநகர்,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. இதுதவிர மாநில அளவில் என்ஜினீயரிங் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் பதிவு செய்வதற்கும் சிறப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக படித்த இளைஞர்கள் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டியது அத்தியாவசியமாக இருந்து வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிந்த பின்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்காக பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை கிடைக்காதோருக்கு உதவித்தொகை வழங்கும் நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து 50 வயதை கடந்துவிட்டவர்களுக்கு கூட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து வேலைவாய்ப்பிற்கான நேர்முகத்தேர்விற்கு எவ்வித தகவலும் வராத நிலையில் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையே நீடிக்கிறது.
இதனால் காலப்போக்கில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதை தவிர்த்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை தேடி செல்லும் நிலை அதிகரித்தது. வேலைவாய்ப்பு அலுவலகங்களும் மாவட்டம்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்–1 முதல் குரூப்–4 வரை பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு அரசுப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யும் நிலை இருந்து வருகிறது. இதுதவிர கூட்டுறவுத்துறை, தங்கள் துறைகளில் பணியிடங்களை நிரப்புவதற்கு தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறது. தற்போது அனைத்து அரசுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு கீழ்நிலை பணியிடங்களுக்கு நேரடி நியமனங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்படுகிறது.
போக்குவரத்து கழகங்களும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்களை நேரடியாக நியமனம் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேர்முகத்தேர்வு நடத்தி நியமிக்கப்படுகின்றனர்.
ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தனியாக தேர்வு நடத்துகிறது. தனியார் பள்ளிகளிலும் காலியிடங்களுக்கு முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணி நியமனம் செய்யப்படும் நிலை உள்ளது. இவ்வாறாக அனைத்து அரசுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் நேரடி நியமனங்கள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுவதால் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அதன் முக்கியத்துவம் இல்லாமல் செயல் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
எனவே தற்போதுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற படித்த இளைஞர்கள் தவித்துவரும் நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களை போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையமாக மாற்றிவிட்டால் படித்த இளைஞர்களுக்காவது பலன் கிடைக்கும்.
எனவே தமிழக அரசு இதுபற்றி கல்வியாளர்களுடன் கலந்தாய்வு செய்து உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.