மதுரையில் ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை


மதுரையில் ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 3 Dec 2018 4:03 AM IST (Updated: 3 Dec 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 70). இவர் ரெயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றிருந்தார். இதனால் அவரது வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்தநிலையில் சவுந்திரபாண்டியன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், அதுதொடர்பாக அவருக்கும் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சவுந்திரபாண்டியன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

முன்னதாக கொள்ளை சம்பவம் நடத்த வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடந்தது. இதுதவிர தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

மதுரையில் சமீப காலமாக பூட்டிக் கிடக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு திருட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story