மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும்; அமைச்சர் மணிகண்டன் பேச்சு
மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
நயினார்கோவில்,
நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குப்புசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அமுதா அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:– ஜனவரி மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் போலவே காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் முதல்–அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார். மாணவ செல்வங்களை வழி நடத்திச்செல்ல வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஆசிரியர்கள் பயிற்சிஅளிக்க வேண்டும். மாணவர்கள் குறிக்கோளோடு வாழவேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையே அடைவீர்கள். இறைவன் கொடுப்பதை, கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் மேமங்கலம் துரைசிங்கம், வல்லம் துரைசிங்கம், அ.தி.மு.க. பிரதிநிதி ஞானசேகரன், பாண்டியூர் ஊராட்சி செயலாளர் முத்துராமலிங்கம், நயினார்கோவில் கிளை செயலாளர் கருப்பையா, வாணியவல்லம் ஊராட்சி செயலாளர் நாகநாதன், நயினார்கோவில் ராஜ்குமார், பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.