சண்முகாநதி அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு


சண்முகாநதி அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 3 Dec 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

உத்தமபாளையம், 

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்துள்ளது. அணை நிரம்பி வெளியேறும் தண்ணீர் வரட்டாறு வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. இந்த அணையின் மூலம் இந்த பகுதியில் உள்ள ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, புத்தம்பட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

இதன் மூலம் இங்குள்ள சுமார் 1,500 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகிறது. இதில் தென்னை, வாழை, திராட்சை உள்ளிட்ட சாகுபடிகள் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் சண்முகாநதி அணை ஆண்டுக்கு 3 முறை நிரம்பும். ஆனால் நீர்வரத்து வாய்க்கால் பகுதியில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்வரத்து குறைந்து அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் அணை முழு கொள்ளளவான 52 அடியை எட்டியது. தொடர் நீர்வரத்தால் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. தற்போது அணைக்கு நீர்வரத்தாக 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நீர்வரத்து வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, சண்முகாநதி அணை நிரம்பி தண்ணீர் திறக்க தாமதம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் தெரியவில்லை. தற்போது கால்வாயில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அந்த கால்வாயை சீரமைத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டபோது, சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறும் கால்வாய் விரைவில் சீரமைக்கப்படும். அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story