பண்ருட்டி அருகே: குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
பண்ருட்டி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்மோட்டார் திடீரென பழுதடைந்தது. இதனால் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. கடந்த 10 நாட்களாக காலனி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. இதனால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர். பக்கத்தில் உள்ள விளைநிலங்களுக்கு சென்று குடிதண்ணீர் எடுத்து வந்தனர். மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்கக்கோரி, காலனி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த காலனியை சேர்ந்த பெண்கள், நேற்று காலை காலிகுடங்களுடன் பணிக்கன்குப்பம்- மேலிருப்பு சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள், மின்மோட்டார் சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story