சொத்து தகராறு காரணமாக மாமாவை கொலை செய்ய காரை கடத்திய மருமகன் கூட்டாளியுடன் கைது


சொத்து தகராறு காரணமாக மாமாவை கொலை செய்ய காரை கடத்திய மருமகன் கூட்டாளியுடன் கைது
x
தினத்தந்தி 3 Dec 2018 4:55 AM IST (Updated: 3 Dec 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் சொத்து தகராறு காரணமாக மாமாவை கொலை செய்ய காரை கடத்திய மருமகன் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகர் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரது மகன் விஷ்ணுபிரசாத்(வயது 20). இவர் தனது காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் இணையதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்த ஒருவர் காரை வாங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். காரை பார்ப்பதற்காக கேன்டீன் வீதிக்கு காரை எடுத்து வருமாறு கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விஷ்ணுபிரசாத் காரை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார். அப்போது அங்கு இருந்த 2 பேர் காரின் சாவி மற்றும் ஆவணங்களை பறித்துக் கொண்டு, விஷ்ணு பிரசாத் முகத்தில் ‘ஸ்பிரே’வை அடித்து காரை கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே இது குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர். எனவே நகர் முழுவதும் போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உப்பளம் அம்பேத்கர் சாலையில் அந்த கார் வருவது தெரியவந்தது. அங்கு சோதனையில் ஈடுபட்ட ஒதியஞ்சாலை போலீசார் அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

அந்த காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேன்டீன் வீதியைச் சேர்ந்த எட்வின்(26), அவரது கூட்டாளி முதலியார்பேட்டை ராமலிங்கம் வீதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் கிரிதரன்(19) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் 2 பேரையும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, லாசர் மன் எட்வின் சொத்து தகராறு காரணமாக கடலூரில் உள்ள அவரது மாமா ராஜசுந்தரத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி தனது கூட்டாளியுடன் சேர்ந்து காரை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வின், கிரிதரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு வீச்சரிவாள், 2 கத்திகள், பெப்பர் ஸ்பிரே, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story