குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்: தடுப்பணை, பாலம் கட்டுவதற்கான இடம் - கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டார்


குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்: தடுப்பணை, பாலம் கட்டுவதற்கான இடம் - கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 2 Dec 2018 10:00 PM GMT (Updated: 2 Dec 2018 11:33 PM GMT)

குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தடுப்பணை, பாலம் கட்டுவதற்கான இடத்தை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீமுஷ்ணம், 

குறிஞ்சிப்பாடி தாலுகா எல்லைக்குடிக்கு கலெக்டர் அன்புசெல்வன் வருகை தந்தார். பின்னர் அவர் அங்குள்ள பாலம், பரவனாறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் பரதம்பட்டு- மேலபுதுப்பேட்டை கிராமத்திற்கு செல்வதற்காக பரவனாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் புவனகிரி ஒன்றியம் ஜெயங்கொண்டான் ஊராட்சியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியைஆய்வு செய்தார். அப்போது அந்த தொட்டியை பழுதுபார்க்கவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.

அதையடுத்து குமுடிமூலை ஏரியை பார்வையிட்ட கலெக்டர் அன்புசெல்வன், குடிமராமத்து பணியின் கீழ் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும் தூர்வாரப்படும் மண்ணை ஏரியின் கரையில் கொட்டி பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், உபரி மண்ணை விவசாய நிலங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து நத்தமேடு ஏரி, சொக்கன்கொல்லை ஏரி, கொத்தவாச்சேரி ஏரி ஆகிய நீர்நிலைகளை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் தாலுகா ஸ்ரீநெடுஞ்சேரியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான இடத்தையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு கள்ளிப்பாடி - காவனூர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) மணிமோகன், தாசில்தார்கள் விஜயா (குறிஞ்சிப்பாடி), ஹேமாஆனந்தி (புவனகிரி), சாமிக்கண்ணு (ஸ்ரீமுஷ்ணம்) மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story