கழிப்பிட வசதி கேட்டு: கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கழிப்பிட வசதி கேட்டு: கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2018 3:30 AM IST (Updated: 3 Dec 2018 10:18 PM IST)
t-max-icont-min-icon

கழிப்பிட வசதி கேட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்து மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில், மனு அளிப்பதற்காக ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தங்கள் பகுதிக்கு கழிப்பிட வசதி வேண்டும் என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தங்கம்மாள்புரம் கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1,000 பேர் வசித்து வருகிறோம். பொது கழிப்பிடம் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நோய்கள், பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுகிறது. எனவே, பெண்களின் பயன்பாட்டுக்காக பொதுகழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களின் கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் தேனி வழியாக அதிக அளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அங்கு போதிய அளவில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, அங்கு பொது கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தேனி முல்லைநகரை சேர்ந்த ஆசை.சிவக்குமார் என்பவர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு இளைஞர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில், ‘பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறை சார்பாக அதற்கான ஆய்வறிக்கை தயார் செய்து மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவாக அனுப்பினால் தான் வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எங்கள் கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் வெளிவரும்’ என்று கூறியிருந்தனர்.

பா.ம.க. மனு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேட் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்குகிறது. மேலும், வாய்க்கால்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் வாழ்விடமாக மாறி உள்ளது. எனவே, வாய்க்கால்கள், ஓடைகள், வடிகால்களை தூர்வார வேண்டும்’ என்று கூறியிருந்தனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தேவாரம் பேரூர் செயலாளர் பாரத் அளித்த மனுவில், ‘தேவாரம் பகுதியில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெற்று வந்த பலருக்கு கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், முதியவர்கள், கணவனால் கை விடப்பட்டவர்கள், விதவைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தகுதியான நபர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நியூ அனுகிரகா காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘எங்கள் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. சுகாதாரக்கேட்டால் நோய் பரவும் சூழல் உள்ளது. மின்கம்பம் சாய்ந்து விழுந்துள்ளது. இன்னும் சீரமைக்கப்படவில்லை. தெருக்களில் சாலை சேதம் அடைந்துள்ளது. எனவே, இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

செங்கதிர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு அளித்த மனுவில், ‘எரசக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களிடம் பாகுபாடு பார்த்து பாடம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி பிரேமா என்பவர் தனது 2 பெண் குழந்தைகளை உடன் அழைத்து வந்து மனு அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட போது, ‘எனது கணவர் கேரளாவில் கூலி வேலை பார்க்கிறார். நான் எங்கள் ஊரில் கூலிவேலை பார்க்கிறேன். எனது மூத்த மகள் 4-ம் வகுப்பும், இளைய மகள் 2-ம் வகுப்பும் படிக்கின்றனர். திருமணமாகி சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது. ரேஷன் கார்டுக்காக எனது பெற்றோர் வீட்டில் இருந்த ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்து விட்டேன். ஆனால், எனது கணவர் வீட்டில் பெயர் நீக்கம் செய்யும் முன்பே ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது. புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளித்தோம். ஆனால், ஆதார் கார்டு இல்லை என்று கூறி ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. ஆதார் கார்டு எடுக்கச் சென்றால் ரேஷன் கார்டு கேட்கிறார்கள். இதனால், அரசு நலத்திட்டங்கள் எதையும் பெற முடியவில்லை. இலவச அரிசியை கூட பெற முடியாமல் விலை கொடுத்து அரிசி வாங்கி சாப்பிடுகிறோம். வாங்கும் கூலி அரிசி வாங்குவதற்கே போதுமானதாக இருப்பதில்லை. எனவே, ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்’ என்றார்.

Next Story