மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:30 AM IST (Updated: 3 Dec 2018 10:25 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

வேலூர், 

உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வேலூரில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், குழந்தைகள் பாதுகாப்பு நலஅலுவலர் நிஷாந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு 191 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 68 ஆயிரத்து 880 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் வளம்பெற மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தினார். அந்த திட்டங்கள் தற்போதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது.

வேலூர் மாவட்டத்தில் 84 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நலத்திட்டங்களை பெற அரசு உறுதுணையாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க வங்கியில் மானியக்கடன், கல்விக்கடன், 3 சக்கர சைக்கிள்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், பிரெய்லி கைக்கெடிகாரம், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று மாற்றுத்திறனாளிகள் பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசுகையில், ‘உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இந்தியாவில் 2.1 சதவீதமும், தமிழகத்தில் 1.8 சதவீதமும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். சராசரி மனிதர்களை போன்று மாற்றுத்திறனாளிகளையும் நடத்த வேண்டும், அவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை கொடுக்க வேண்டும். கர்ப்பத்தின்போது உரிய ஊட்டச்சத்து சாப்பிடாதது, நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்வது உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் பிறக்கிறார்கள். 1995-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அது கடந்த 2016-ம் ஆண்டு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உயர்கல்வியில் 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘வெல்மாவில்’ ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்’ என்றார்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருட்கள் கண்காட்சியினை அமைச்சர் கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் வேலூர் தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஆவின் முன்னாள் தலைவர் வேலழகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.ராகவன், பெல் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story