கரிகிரி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தர வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு
கரிகிரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று பொதுமக்கள் குறை தீர்வுநாள் கூட்டத் தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக் கள் கொடுத்தனர்.
முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வங்கிக் கடன், வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கரிகிரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கரிகிரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இறைவணக்க கூட்டம் நடத்த இடமும், விளையாட்டு மைதானமும் இல்லை. எனவே பள்ளிக் கூடத்திற்கு எதிரில் உள்ள ஏரியில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கி றோம். அந்த இடத்தில் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருகிறார். அவருடைய லாரி, பொக்லைன் எந்திரம் போன்ற வாகனங்களை மாணவர் களுக்கு இடையூறாக பள்ளி முன்பு நிறுத்தி இருக்கிறார்.
எனவே ஏரிநிலத்தை அளவீடு செய்து மாணவர்கள் இறைவணக்க கூட்டம் நடத்த இடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
காட்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் கனகராஜ் என்பவருடைய மனைவி எலிசபெத் (வயது 70) கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். என்னுடைய நகைகளை விற்று எனது கணவர் பெயரில் பழைய ஓட்டு வீடு ஒன்று வாங்கினோம். எனது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது மகன்கள் தனித்தனியாக வீடு கட்டுவதாகவும், அதில் எனக்கு ஒரு அறை கட்டித் தருவதாகவும் கூறினர். அதை நம்பி வீட்டை 4 பாகங்களாக பிரித்து கொடுத்தேன்.
அதில் இளைய மகனுக்கு கொடுத்த பாகத்தை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டார். வீட்டை வாங்கியவர்கள், அந்த வீட்டை இடிக்க வருகிறார்கள். இந்த வீட்டை இடித்தால் நான் தங்குவதற்கு வீடு இல்லை. மற்ற மகன் களிடம் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவர்களும் இடம் தர மறுக்கிறார்கள்.
இதனால் முன்னாள் ராணுவ வீரரின் மனைவியாக இருந்தும் தங்குவதற்கு வீடு இல்லாமல், வயதான காலத் தில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே மகன்களுக்கு தானமாக எழுதி கொடுத்த சொத்துபத்திரத்தை ரத்து செய்து வீட்டை எனது பெயருக்கு பட்டாமாற்றம் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் கிருஷ்ணகுமார் என்பவர் தனது பெற்றோர், சகோதரி, மனைவி ஆகி யோரை தாக்கிவிட்டு கொள் ளையடிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தார். அப்போது நாட்டை பாது காக்கும் எனது வீட்டுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் நான் இந்த வேலை பார்க்க தேவையில்லை என்றார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story