திருவண்ணாமலையில் தம்பதி கைது: 10 ஆண்டுகளில் 8 ஆயிரம் கருக்கலைப்புகள் செய்து உள்ளனர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு


திருவண்ணாமலையில் தம்பதி கைது: 10 ஆண்டுகளில் 8 ஆயிரம் கருக்கலைப்புகள் செய்து உள்ளனர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 3 Dec 2018 5:09 PM GMT)

திருவண்ணாமலையில் வீட்டில் கருக்கலைப்பு மையம் நடத்தி கைதான தம்பதியினர் 10 ஆண்டுகளில் 8 ஆயிரம் கருக்கலைப்புகள் செய்து உள்ளனர். அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கர்ப்பிணிகளின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவிப்பது மற்றும் கருக்கலைப்பு போன்ற செயல்கள் நடைபெறுவதாக சென்னை ஊரக மற்றும் சுகாதார நலப் பணிகள் இயக்ககத்தை சேர்ந்த பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி நள்ளிரவு மாநில கண்காணிப்பு குழுவினர், ஒரு கர்ப்பிணி பெண்ணை அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற மாநில கண்காணிப்பு குழுவினர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த ஆனந்தி (வயது 50), அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தி கருக்கலைப்பு வழக்கு தொடர்பாக ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அவர் கைது செய்யப்படுவது இது 3-வது முறையாகும்.

தற்போது அவர் வேங்கிக்காலில் கட்டியுள்ள புதிய வீட்டில் வைத்து இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உள்ளார். இந்த வீடு பெரிய மாளிகை போன்று உள்ளது. இந்த வீட்டில் இருந்து அவசர காலத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியில் செல்ல பாதாள அறை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. இதற்கு இரும்பு கம்பியால் ஆன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வீடு மிகவும் ரசனையாக கட்டப்பட்டு உள்ளதாக விசாரணைக்கு சென்ற போலீசார் தெரிவித்தனர்.

இவருக்கு இந்த பிரமாண்டமான வீடு கட்ட பணம் எங்கிருந்து வந்தது, இந்த சட்டவிரோத செயல் மூலம் இவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வந்து உள்ளது என்று வருமான வரித்துறை மூலம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஆனந்தியை தொடர்பு கொள்ளும் கர்ப்பிணிகளை அவர் எளிதில் வீட்டிற்கு அழைப்பது இல்லை. இரவில் தான் வீட்டிற்கு அழைப்பார் என்று கூறப்படுகிறது. கர்ப்பிணிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு முதலில் வரவழைக்கப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் ஆனந்திக்கு செல்போனில் தொடர்பு கொண்ட பிறகு பஸ் நிலையத்தில் அந்த இடத்திற்கு வா, இங்க வா என்று அலைக்கழிக்க விடுவார்களாம்.

இதனை கண்காணித்து கொண்டு இருக்கும் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் அந்த கர்ப்பிணிகளிடம் சென்று நான் ஆனந்தியின் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறி ஆட்டோவில் அழைத்து செல்வார்.

அதுவும் பஸ் நிலையத்தில் இருந்து பொன்னுசாமி நகருக்கு நேரடியாக செல்லாமல், பல்வேறு பகுதி வழியாக சென்று எப்படி ஆனந்தியின் வீட்டிற்கு வந்தோம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அழைத்து வருவார். இதற்கு ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ரூ.2 ஆயிரம் ஆட்டோ கட்டணமாக பெற்று உள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஆனந்தி கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்து உள்ளதாகவும், இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்புகளை அவர் செய்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து அழைப்புகள் வந்து உள்ளன. அவரது செல்போன் எண்ணை கொண்டு, ஆனந்திக்கு வேறு யாரெல்லாம் உடந்தையாக இருந்து உள்ளனர் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story