அஞ்செட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு


அஞ்செட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 3 Dec 2018 5:34 PM GMT)

அஞ்செட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பஸ் நிலையத்தின் உள்ளே மற்றும் சுற்றி உள்ள பகுதிகளிலும் பலர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாரிகள் அஞ்செட்டிக்கு சென்று பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் பரிமேலழகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மட்டுமே அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story