நிவாரணம் வழங்கக்கோரி பட்டுக்கோட்டையில், தென்னை விவசாயிகள் ஊர்வலம் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்


நிவாரணம் வழங்கக்கோரி பட்டுக்கோட்டையில், தென்னை விவசாயிகள் ஊர்வலம் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:45 PM GMT (Updated: 3 Dec 2018 7:30 PM GMT)

பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம், தென்னை உற்பத்தியாளர்கள்-விற்பனையாளர்கள் சங்கம், அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ரூ.20 ஆயிரமும், வீடுகள், நெல், வாழை, இதர பயிர்கள், மரங்கள் மற்றும் மீனவர் வலை படகு உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளுக்கும் அறிவித்த நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஏ.பழனிவேல், ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பையன், பாலசுந்தரம், பிஆர்.நாதன், பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் பழனியப்பன் தெரு, சின்னையா தெரு, மயில்பாளையம், முத்துப்பேட்டை ரோடு வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு வந்தது.

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை அலுவலக முகப்பிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 10 பேர் கொண்ட குழுவினரை மட்டும் உதவி கலெக்டரை சந்திக்க அனுமதி கொடுத்தனர். ஆர்ப்பாட்ட குழுவினர் உதவி கலெக்டர் (பொறுப்பு) தவச்செல்வத்தை சந்தித்து புயலால் ஏற்பட்ட தென்னை மரம் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்புகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் தெரிவித்தார்.

இந்தநிலையில் உதவிகலெக்டர் அலுவலக வாசலில் திடீரென தென்னை விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் மாநில தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, பி.ஆர்.நாதன், பாசன விவசாயிகள் சங்க தலைவர் வீரசேனன் ஆகியோர் பேசினர். முடிவில் வக்கீல் ஆர்.ராமசாமி நன்றி கூறினார். இந்த தர்ணா போராட்டம் 2 மணி நேரம் நடந்தது. பின்னர் தென்னை விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story