மஞ்சூர் பகுதியில்: காபி மகசூல் அதிகரிப்பு - விலை இல்லாததால் விவசாயிகள் கவலை


மஞ்சூர் பகுதியில்: காபி மகசூல் அதிகரிப்பு - விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 3 Dec 2018 10:15 PM GMT (Updated: 3 Dec 2018 8:02 PM GMT)

மஞ்சூர் பகுதியில் காபி மகசூல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மஞ்சூர், 

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது தேயிலை விவசாயம். மேலும் விவசாயிகள் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக காபி பயிரிட்டுள்ளனர். இந்த காபி விவசாயம் ஆரம்ப காலத்தில் குந்தா பகுதியிலும் அதனை தொடர்ந்து கூடலூர் பகுதியிலும் செய்யப்பட்டது. இதில் குந்தா பகுதியில் அராபிக்கா என்ற ரக காபியும், கூடலூர் பகுதியில் ரோபொஸ்டா என்ற ரக காபியும் பயிரிடப்பட்டு வந்தன.

தற்போது மஞ்சூர் பகுதியில் கீழ்குந்தா, மட்டக்கண்டி, மஞ்சூர், மேல்குந்தா, எடக்காடு, குந்தா பாலம், முக்கிமலை, மைனலை, பெங்கால், கைக்காட்டி, மேலூர், மஞ்சக்கம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக காபி பயிரிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக காபி மகசூல் அதிகரித்துள்ளது. இதனை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக உள்ளனர். கடந்த அக்டோபர் இறுதி தொடங்கி வருகின்ற ஜனவரி இறுதி வரை மகசூல் கிடைக்கும்.

தற்சமயம் அறுவடை செய்யும் காபிகளை விவசாயிகள் தோல் நீக்கி காபி கொட்டைகளை வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 1 கிலோ கொட்டைக்கு அதிகபட்சமாக ரூ.120 வரை மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலையடைத்துள்ளனர்.

இதுகுறித்து தேயிலை தோட்ட விவசாயிகள் கூறியதாவது:- தற்போது கிடைக்கும் விலையை வைத்து தொழிலாளர்களுக்கு கூலி வழங்க கூட முடியவில்லை. காபிக்கு குறைந்தபட்சம் ரூ.250 வரை கிடைத்தால் மட்டுமே ஓரளவு வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும்.

விலை இல்லாத காரணத்தினால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்துள்ள காபியை பறிக்காமல் விட்டு விடுகின்றனர். எனவே, காபி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அறுவடை செய்யும் காபிகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, அதற்கு உண்டான மானியம் வழங்க வேண்டும் என்பதை அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. எனவே, காபி விவசாயிகளுக்கு மானியம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

Next Story