தேவர்சோலை பகுதியில் கால்நடைகளை திருடும் கும்பல் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேவர்சோலை பகுதியில் கால்நடைகளை திருடும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா பகுதியில் விவசாயிகள், கூலி மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் தங்களது வீடுகளில் பசு மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வனவிலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. குடியிருப்புக்குள் புகுந்து கால்நடைகளை சிறுத்தைப்புலி அடித்து கொன்று வருகிறது. கால்நடைகளை வனவிலங்குகள் தாக்கியதன் மூலம் தான் இறந்தது என்று கால்நடை டாக்டர் மூலம் உறுதி செய்த பின்னரே வனத்துறையினர் உரிய இழப்பீடு தொகை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தேவர்சோலை பகுதியில் கால்நடைகள் தொடர்ந்து மாயமாகி வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
பாடந்தொரை காவதி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது 3 ஆடுகள் கடந்த மாதம் 17-ந் தேதியும், தேவர்சோலை போலீஸ் நிலையம் அருகே சந்திரமல்லன் என்பவரது மாடும், 8-ம் மைல் சின்னையன் காலனியை சேர்ந்த ராஜூ என்பவரது 3 மாடுகள் கடந்த 25-ந் தேதி காணாமல் போய் விட்டது.
கால்நடைகளை சிறுத்தை புலிகள் பிடித்து சென்று இருக்கலாம் என சந்தேகித்து அப்பகுதி மக்கள் பல இடங்களில் தேடியும் கால்நடைகள் குறித்து எந்த தடயங்களும் கிடைக்க வில்லை. கால்நடைகளை சிறுத்தை புலிகள் தாக்கி கொன்றால் அதன் உடற்பாகங்கள் ஏதாவது ஒரு இடத்தில் கிடக்கும். அல்லது கால்நடைகளை இழுத்து சென்ற தடயங்களும் தெரியும். ஆனால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
எனவே கால்நடைகளை மர்ம கும்பல் திருடி சென்று இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தேவர் சோலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். எனவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி கால்நடைகளை கடத்தி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story