ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தந்தை– மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தந்தை– மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 5:00 AM IST (Updated: 4 Dec 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தந்தை– மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் (வயது 70) மற்றும் அவரது மகன் முருகேசன் (37) ஆகியோர் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைத்து, அவர்கள் கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை எடுத்து திடீரென தங்களது உடலில் ஊற்றினார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினர்.

இதைத்தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். ‘முருகேசனும், கருப்பண்ணனும் ரங்கம்பாளையத்தில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளனர். ஆனால் வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை அவரது மகளுக்கு எழுதி கொடுத்ததாக தெரிகிறது. அவரது மகள் வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு தாலுகா போலீசில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் இருவரும் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.


Next Story