அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.1¼ லட்சம் திருட்டு
அவினாசி அருகே பனியன் நிறுவன தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன்நகை மற்றும் ரூ.1¼ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
அவினாசி,
அவினாசி அருகே உள்ள பழங்கரை ஏ.வி.பி.விரிவு பகுதியை சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 42). இவர் அவினாசிலிங்கம்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாதவி. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளத்துரை நெல்லைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் இருந்த அவருடைய மனைவி வீட்டை பூட்டி விட்டு, தோழி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நெல்லையில் இருந்து நேற்று அதிகாலை வீட்டிற்கு வெள்ளத்துரை சென்றார். அப்போது வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வெள்ளத்துரை வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் 2 அறைகளில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. மேலும் அதில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்து இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வெள்ளத்துரையும், அவருடைய மனைவி மாதவியும், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், வெள்ளத்துரையின் வீட்டிற்கு சென்று, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 20 பவுன்நகை மற்றும் ரூ.1¼ லட்சத்தை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் திருட்டு சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.