குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவரை மீட்டு தர வேண்டும் - குழந்தைகளுடன் வந்து தாயார் மனு
வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவரை மீட்டு தர வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 குழந்தைகளுடன் வந்து பெண் மனு அளித்தார்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கோவை ரத்தினபுரி கண்ணப்பநகரை சேர்ந்த சாவித்திரி தனது 3 குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனக்கும் பத்ரசாமி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளார். எனது கணவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவர் என்னையும், எனது குழந்தைகளையும் தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீசில் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனது கணவர் எங்களுக்கு செலவுக்கு பணம் தர மறுப்பதால் நாங்கள் சாப்பிடக்கூட வழியின்றி தவித்து வருகிறோம். எனவே அந்த பெண்ணிடம் இருந்து எனது கணவரை மீட்டு தர வேண்டும் அல்லது எங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை அடுத்த நொய்யல் காலனியை சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் இனியன் தலைமையில் அளித்த மனுவில், இருகூர் பேரூராட்சி நொய்யல் காலனியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். தற்போது எங்களை 21 நாட்களுக்குள் காலி செய்யும் படி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அரையாண்டு தேர்வு நெருங்கி உள்ள நிலையில் வீடுகளை காலி செய்ய கூறுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே வீடுகளை காலி செய்ய வருகிற மே மாதம் வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கோவை வெள்ளக்கிணறை சேர்ந்த மகாதேவி மற்றும் சிலர் அளித்த மனுவில், முறையாக படித்து பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப பணியாளர்களை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத் திரிகளில் பணியமர்த்த வேண்டும். ஆனால் பயிற்சி முடிக்காதவர்களை பணியமர்த்துவதால், நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அரசு மருத்துவ கல்லூரிகளில் முறையாக படித்து பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்காள் தோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை மாநகராட்சி 55-வது வார்டு கருப்பக்காள் தோட்டத்தில் பாலம் அமைப்பதற்காகவும், சாலை வசதிக்காகவும் 37 வீடுகள் இடிக்கப்பட்டன. பின்னர் எங்களுக்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 37 தற்காலிக குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டன. தற்போது இந்த வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. அவற்றை சீரமைத்து தர வேண்டும். கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலமிழந்தோர் சங்கத்தினர் அளித்த மனுவில், பாரதியார் பல் கலைக் கழகம் அமைக்க சிறு, குறு விவசாயிகளிடம் 925 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடு மிக குறைவாக வழங்கப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டு அறிவித்த இடைக்கால இழப்பீடு தொகைக்கு சட்டப்படி வட்டி வழங்காமல் 7 சதவீத வட்டி மட்டுமே வழங்க அரசாணை பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதனை மாற்றி சட்டப்படி வட்டி வழங்க வேண்டும். தற்போது நாங்கள் வழங்கிய நிலத்தில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எங்களது குடும்பத்தினர் ஒருவருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story