ஒரு ஆண்டுக்கு மேலாக மூடி கிடந்த வாணியம்பாடி நியூடவுன் ரெயில்வே கேட் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி
ஒரு ஆண்டுக்கு மேலாக மூடி கிடந்த வாணியம்பாடி நியூடவுன் ரெயில்வே கேட் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி டவுன் - நியூடவுன் பகுதியை இணைக்கும் இடத்தில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இதன் வழியாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருவதால் அடிக்கடி கேட் மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சுமார் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அப்பணிகள் தொடங்குவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நியூடவுன் பகுதிக்கு செல்லவும், நகரத்திற்குள் வரவும் கோனாமேடு தரைப்பாலம், புதூர் மேம்பாலம் என சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அவதிபட்டு வந்தனர்.
ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சுரங்கப்பாதை அமைக்கும் ஒப்பந்ததாரர் இப்பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அமைச்சர் நிலோபர்கபில் ரெயில்வே துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விரைவில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி வந்தார்.
மேலும் சமூக ஆர்வலர் பாரூக்அஹமத் என்பவர் நியூடவுன் ரெயில்வே கேட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, பொதுமக்கள் அதிகளவு பாதிப்புக்குள்ளாவதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரெயில்வே கேட்டை மீண்டும் திறக்க உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ரெயில்வே அதிகாரிகள் சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மண்ணால் மூடி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் நேற்று மாலை 4.20 மணியளவில் வாணியம்பாடி ரெயில் நிலைய அதிகாரிகள் சேகர், பூபதி ஆகியோர் முன்னிலையில் இலகுரக வாகனங்களான கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் மட்டும் சென்று வரக்கூடிய வகையில் நியூடவுன் ரெயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story