காதல் ஜோடி தப்பிச்செல்ல உதவியதாக பயங்கரம் இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை; கணவர் படுகாயம் இளம்பெண்ணின் உறவினர்கள் 3 பேர் கைது


காதல் ஜோடி தப்பிச்செல்ல உதவியதாக பயங்கரம் இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை; கணவர் படுகாயம் இளம்பெண்ணின் உறவினர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2018 10:05 PM GMT (Updated: 3 Dec 2018 10:05 PM GMT)

துமகூருவில் காதல் ஜோடி வீட்டைவிட்டு தப்பிச்செல்ல உதவியதாக கூறி இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.. மேலும் அவரது கணவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக இளம்பெண்ணின் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துமகூரு,

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆவலயனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் துவாரகா ராத்தியா. இவரது மனைவி பாக்கியம்மா (வயது 38). இவர்கள் 2 பேரும், அதே கிராமத்தை சேர்ந்த தீபக் என்பவரின் தோட்டத்தில் கூலி வேலை செய்தனர். தோட்டத்தில் உள்ள சிறிய வீட்டில் கணவன், மனைவி வசித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் துவாரகா ராத்தியா, அவரது மனைவி பாக்கியம்மா வீட்டில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தோட்டத்திற்கு வந்த மர்மநபர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் ஆயுதங்களால் துவாரகா ராத்தியா, அவரது மனைவி பாக்கியம்மாவை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.

பின்னர் அங்கிருந்து மர்ம நபர்கள் ஓடிவிட்டார்கள். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய கணவன், மனைவியை தீபக் மற்றும் கிராம மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாக்கியம்மா பரிதாபமாக இறந்து விட்டார். துவாரகா ராத்தியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்றும் கொரட்டகெரே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஆவலயன பாளையாவை சேர்ந்த வரலட்சுமியும், மண்டியா மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரும் காதலித்துள்ளனர். கிருஷ்ணப்பா மாம்பழ வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக துமகூருவுக்கு வந்த போது கிருஷ்ணப்பாவுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு பாக்கியம்மா உதவி செய்ததாக தெரிகிறது. மேலும் கடந்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி கிருஷ்ணப்பாவும், வரலட்சுமியும் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டனர். தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் கிருஷ்ணப்பாவும், வரலட்சுமியும் வீட்டை விட்டு ஓடிப்போவதற்கு பாக்கியம்மாவும், அவரது கணவரும் உதவி செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த வரலட்சுமியின் தந்தை மற்றும் குடும்பத்தினர் பாக்கியம்மாவை கொலை செய்திருப்பதாக போலீசார்் கருதுகிறார்கள். இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பாக்கியம்மா கொலை தொடர்பாக வரலட்சுமியின் உறவினர்கள் 3 பேரை கொரட்டகெரே போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Next Story