ரெயில்வே சுரங்கப்பாதையில் நீண்ட நாட்களாக தேங்கி உள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை


ரெயில்வே சுரங்கப்பாதையில் நீண்ட நாட்களாக தேங்கி உள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2018 4:16 AM IST (Updated: 4 Dec 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி,

காரைக்குடி ரெயில்வே நிலையம் அருகே கடந்த 2 ஆண்டிற்கு முன்பு அதனை சுற்றியுள்ள குடியிறுப்பு பகுதி வீடுகள் மற்றும் ரெயில்வே காலனி பகுதி மக்கள் சென்று வருவதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதன் வழியாக ரெயில்வே காலணி மக்கள், பொன்நகர், கலைமணி நகர், பத்மாவதிநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் தினந்தோறும் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் இந்த பாதை வழியாக பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சென்று வருகின்றனர்.

மிகவும் பள்ளமான முறையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பதால் மழைக்காலங்களில் சிறிது மழை பெய்தால் பெருமளவு இந்த பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதையடுத்து அவ்வப்போது இந்த ரெயில்வே ஊழியர்கள் மோட்டார் மூலம் அந்த தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்தது. அப்போது ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் பல நாட்களாக அப்படியே தேங்கி உள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்தப்படியே அந்த பகுதி மக்கள் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் பல நாட்களாக இந்த மழைநீர் அப்படியே தேங்கி நிற்பதால் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே பாலம் வலுவிழக்கும் நிலையும், அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வேதுறை அதிகாரிகள் உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story