அருப்புக்கோட்டையில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
அருப்புக்கோட்டையில் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர்ப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது பற்றி சமூக ஆர்வலர்கள் மூலம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் பொறுப்பேற்றவுடன் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முயற்சி மேற்கொண்டார்.
வியாபாரிகள் தங்கள் கடைகள் முன்பு செய்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள குப்பைத் தொட்டிகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 20–க்கும் மேற்பட்ட போலீசார் அகமுடையார் பகுதியில் இருந்து அண்ணா சிலை, சிவன் கோவில், முஸ்லிம் தெரு, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கடை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறுகையில், “நகரில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடைக்காரர்கள் கடைகள் முன்பு உள்ள சாலையை ஆக்கிரமித்துள்ளதாலும், வாகனங்களை சாலையில் நிறுத்தி வைப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே கடைக்காரர்கள் தங்களது கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இது குறித்து போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் துணையுடன் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும்” என்றார்.