மேம்பாலம் கட்டப்படும் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு இடத்தில் மட்டும் சேவை ரோடு அமைக்க முடிவு


மேம்பாலம் கட்டப்படும் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு இடத்தில் மட்டும் சேவை ரோடு அமைக்க முடிவு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:25 AM IST (Updated: 4 Dec 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ள விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அரசு இடத்தில் மட்டும் சேவை ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுரங்கப்பாதை குறித்து இன்னும் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், சேவை ரோடு அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்பட வில்லை. பாலத்தின் இருபுறமும் சேவை ரோடு அமைக்க விதிமுறைப்படி 5¼ மீட்டர் அகலம் உள்ள இடம் தேவை. சாலையின் மேற்கு பகுதியில் பாலத்தின் தென்புறத்தில் 3¼ மீட்டரும், வடபுறத்தில் 2½ மீட்டர் மட்டுமே அரசு நிலம் உள்ளது.

விதிமுறைப்படி சேவை ரோடு அமைக்க அப்பகுதியில் உள்ளோர் இடம் தர வேண்டும் என கோரப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம், அதிகாரிகளின் நேரடி சந்திப்பு ஆகியவற்றுக்கு பின்னரும் அப்பகுதியில் உள்ளோர் இடம் தர சம்மதிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

ராமமூர்த்தி ரோட்டின் மேற்குப் பகுதியில் பாலத்தின் இருபுறமும் விதிமுறைப்படி சேவை ரோடு அமைக்க அப்பகுதியில் உள்ளோர் இடம் தராத நிலையில் ஏற்கனவே ஐகோர்ட்டு அறிவுறுத்தியப்படி அரசு இடத்தில் சேவை ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று ராமமூர்த்தி ரோட்டின் கிழக்குப் பகுதியில் வடபுறம் தேவையான இடம் இல்லாத நிலையில் அங்கும் அரசு இடத்தில் சேவை ரோடு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி விரைவில் தொடங்கப்பட்டு ஒரு மாத காலத்தில் முடிக்கப்படும். விதிமுறைப்படி சேவை ரோடு அமையாத நிலையில் அப்பகுதியில் உள்ளோருக்கு தான் வசதி குறைவு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேம்பாலத்தின் கிழக்குப்பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், சாலையின் கிழக்கு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி அருகிலும், சாலையின் மேற்குப்பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகிலும் படிக்கட்டுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு ஆஸ்பத்திரி அருகே ரோட்டின் இருபுறமும் உள்ள சிகிச்சை பிரிவுகளை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க 8 வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் இது பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரூ.2 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இன்னும் ஒப்புதல் கிடைக்கவிலலை என்று சொல்லப்படுகிறது. சுரங்கப்பாதை அமைப்பதற்கும் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்தை அனுமதிப்பதற்கும் தொடர்பு ஏதும் இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் சுரங்கப்பாதை அமைப்பது பற்றி விரைந்து முடிவு எடுத்து அந்தப்பணியை முழுமையாக முடித்த பின்னர் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதே நல்லது என்ற கருத்து நிலவுகிறது.


Next Story