ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை உப்பாற்றில் கொட்டியதாக புகார்: வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு, தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ்


ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை உப்பாற்றில் கொட்டியதாக புகார்: வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு, தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 4 Dec 2018 4:45 AM IST (Updated: 4 Dec 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை உப்பாற்றில் கொட்டியதற்காக வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மதுரை,

நெல்லையைச் சேர்ந்த முத்துராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலை கழிவுகளை அகற்றும்போது முறையாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதியுடன் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம், 3.52 லட்சம் டன் கழிவுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல்துறை என்ஜினீயர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளனர்.

இதே அளவில் உள்ள கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் புகார் அளித்தால், மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் அதில் கவனம் செலுத்த தயங்குகின்றனர்.

எனவே மாசுக்கட்டுப்பாடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது, சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

 முடிவில், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வருகிற 12–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story