தெலுங்கானா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு: சேலத்தில் இருந்து ஊர்க்காவல் படையினர் 100 பேர் பயணம்
தெலுங்கானா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சேலத்தில் இருந்து ஊர்க்காவல் படையை சேர்ந்த 100 பேர் நேற்று 2 பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
சேலம்,
தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநில தேர்தல் அதிகாரிகள் தெலுங்கானா போலீசாருக்கு துணையாக பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழக காவல்துறையில் இருந்து ஊர்க்காவல் படையில் பணிபுரியும் சுமார் 4 ஆயிரம் பேரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தெலுங்கானா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்த ஊர்க்காவல்படை வீரர்களின் பெயர் பட்டியல் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் உத்தரவின்பேரில் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரியும் 100 பேர் ஊர்க்காவல் படை ஏட்டு நாராயணன் தலைமையில் நேற்று தெலுங்கானா சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதாவது சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு ஊர்க்காவல் படையினர் 2 பஸ்களில் பயணம் மேற்கொண்டனர். அப்போது, அவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்தல் பாதுகாப்பு பணியில் எவ்வாறு ஈடுபடுவது? அந்த மாநில போலீசாருக்கு உறுதுணையாக செயல்படுவது எப்படி? என்பது குறித்து மாவட்ட ஊர்க்காவல் படை துணை கமாண்டர் பெரியசாமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆயுதப்படை துணை கமாண்டர் பெரியசாமி கூறுகையில், தெலுங்கானா சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் இருந்து 100 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வருகிற 8-ந் தேதி வரை அவர்கள் பணியில் ஈடுபடுவார்கள். தமிழக போலீசாருக்கு இணையாக ஊர்க்காவல்படையினர் ஒழுக்கத்துடன் இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதர படிகள் அனைத்தும் சேலம் திரும்பியவுடன் வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story