நிலுவை சம்பளம் வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்


நிலுவை சம்பளம் வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2018 5:08 AM IST (Updated: 4 Dec 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி காரைக்காலில் ரேஷன் கடை ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றும் 70 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடந்த 16 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். இனி மாதந்தோறும் சம்பளம் வழங்குதல், தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 16-ந் தேதி முதல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம், கஞ்சி காய்ச்சுதல், பிச்சை எடுத்தல் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

கடந்த மாதம் திருநள்ளாறில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்தது. அதனையடுத்து புதுவை அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு 5 மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அறிவித்தபடி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.

இதனால் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை கண்டித்து ஊழியர்கள் போராட்டக்குழு செயலாளர் மனோகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் சங்க வாயிலில் இருந்து, புதிய பேருந்து நிலையம் வரை மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

Next Story