தனியார் படகு குழாமுக்கு எதிர்ப்பு: சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் முற்றுகை
தனியார் படகு குழாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் சுண்ணாம்பாற்றில் படகு குழாம் நடத்தப்படுகிறது. இந்தநிலையில் இங்கு படகு குழாம் நடத்த தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து தனியார் படகு குழாமுக்கு வழங்கப்பட்ட அனுமதி நிறுத்தி வைக்கப்படும் என்று அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தனியார் படகு குழாம் தொடர்ந்து இயங்கியதால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நேற்று புதுவை கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலாத்துறை மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக மேலாண் இயக்குனர் முருகேசன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. அங்கு வந்தார். ஊழியர்களை சந்தித்து பேசிய அவர் ஊழியர்களின் போராட்டத்துக்கு தானும் துணை நிற்பதாக உறுதியளித்தார். இந்தநிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (செவ்வாய்க்கிழமை) தங்கள் போராட்டம் தொடருவோம் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.