வக்கீல்– மனைவி கொலை வழக்கில் காலாப்பட்டு சிறையில் அடையாள அணிவகுப்பு


வக்கீல்– மனைவி கொலை வழக்கில் காலாப்பட்டு சிறையில் அடையாள அணிவகுப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 5:12 AM IST (Updated: 4 Dec 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவை வக்கீல் – மனைவி இரட்டை கொலை வழக்கு தொடர்பாக காலாப்பட்டு சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 72), வக்கீல். இவரது மனைவி ஹேமலதா (65). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். இவர்களது 2 மகன்களும், ஒரு மகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20–ந் தேதி பாலகிருஷ்ணனும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தனர். அவரது வீட்டில் பணம்–நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த கார் டிரைவர் முகமது காசிம், அவரது நண்பர் முகமது இலியாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம்– நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் காலாப்பட்டு சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த உருளையன்பேட்டை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து அடையாள அணிவகுப்பு நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 3 பேரை உருளையன்பேட்டை போலீசார் நேற்று மதியம் காலாப்பட்டு சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது குற்றவாளிகளை அவர்கள் அடையாளம் காட்டினர். அவை பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைதான முகமது காசிம், முகமது இலியாஸ் ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story