திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 4 Dec 2018 11:00 PM GMT (Updated: 4 Dec 2018 5:14 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

திருவாரூர்,


கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 17–ந் தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதனைத்தொடர்ந்து நேற்று திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தார்.

முன்னதாக கொரடாச்சேரி கடைவீதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வெண்ணவாசல், நாலில்ஒன்று, முசிரியம், தக்களூர், விடயபுரம் வழியாக கண்கொடுத்தவணிதம் சென்றார். அங்கு மாற்றுத்திறனாளி கோவிந்தராஜன் என்பவர் தனக்கு உரிய உதவிகள் வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அந்த கோரிக்கை மனுவை அவரிடம் இருந்து ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.


பின்னர் அங்கிருந்து புறப்பட்டு எருக்காட்டூர் வந்தார். அப்போது சாலை ஓரத்தில் வசித்து வந்த லதா என்பவருடைய தாய் அம்சம் என்பவருக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்த்த மு.க.ஸ்டாலின், உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி இறந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் கமலாபுரம், வெள்ளக்குடி, தேவர்கண்டநல்லூர் வழியாக திருவாரூர் வந்தார்.

திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன் பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு புலிவலம், மாங்குடி, மாவூர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு மீட்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை. நிவாரண உதவிகள் சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதனை கேட்ட அவர், தங்களின் பாதிப்புகளை நான் நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டேன். தங்களுக்கு தேவையான உதவிகளை தி.மு.க. சார்பில் நிச்சயம் செய்து தரப்படும் என கூறினார்.


பின்னர் பின்னவாசலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புதூர், உமாமகேஸ்வரபுரம், பின்னவாசல், திருக்காரவாசல், குன்னியூர், வேப்பத்தாங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மாங்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாங்குடி, கூடூர், திருநெய்ப்பேர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் அரிசி, போர்வை, வேட்டி, சேலை உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார். இதன் பின்னர் மாங்குடியில் இருந்து புறப்பட்டு வடகரை, கமலாபுரம், மன்னார்குடி வழியாக திருச்சிக்கு புறப்பட்டார். செல்லும் வழியெங்கும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி.ராஜா, ஆடலரசன், மதிவாணன், முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் கலியபெருமாள், தேவா, நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story