தூத்துக்குடியில் பயங்கரம் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை குடும்பத்தகராறில் மருமகன் வெறிச்செயல்
தூத்துக்குடியில் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். குடும்பத்தகராறில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மருமகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். குடும்பத்தகராறில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மருமகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சுமை தூக்கும் தொழிலாளி
தூத்துக்குடி பாக்கியநாதன்விளையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி. இவர்களுக்கு மாரியம்மாள், வெள்ளையம்மாள் என்ற மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
மாரிமுத்துவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் லீலாவதி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
மாரியம்மாளின் கணவர் காளிராஜ் (43). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானா பகுதி ஆகும். மீன் வியாபாரியான காளிராஜிக்கும், மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போதெல்லாம் மாரியம்மாள் தனது 4 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார்.
பிணமாக கிடந்தார்
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் கணவரிடம் கோபித்துக் கொண்டு மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் பாக்கியநாதன்விளையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் குழந்தைகளை அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தூத்துக்குடியில் உள்ள இரும்பு குடோனுக்கு மாரியம்மாள் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் லீலாவதி, மாரியம்மாள் ஆகியோர் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மாரிமுத்து மட்டும் தனியாக இருந்தார்.
மதியம் பக்கத்து தெருவில் வசித்து வரும் மாரிமுத்துவின் மற்றொரு மகள் வெள்ளையம்மாள் தனது தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மாரிமுத்து இறந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கழுத்தை நெரித்துக் கொலை
இதுகுறித்து உடனடியாக தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாரிமுத்துவின் கழுத்து பகுதியில் கயிற்றை கொண்டு நெரித்த தடம் மற்றும் பின் தலையில் ரத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று காலையில் காளிராஜ் தனது மனைவியை அழைத்து செல்ல பாக்கியநாதன்விளைக்கு வந்தார். ஆனால் வீட்டில் மாரிமுத்து மட்டும் இருந்துள்ளார். அப்போது மாரியம்மாளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி காளிராஜ் தெரிவித்தார். ஆனால் மாரிமுத்து மறுத்துவிட்டார்.
இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ் வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து மாரிமுத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வழிந்ததும் தெரியவந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பின்னர் காளிராஜ் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டார்.
வலைவீச்சு
இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காளிராஜை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டியில் நடந்த ஒரு கொலை வழக்கில் காளிராஜிக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story