குறுவை நெல்லுக்கு உள்ளதைப்போல் தென்னைக்கும் தொகுப்பு திட்டம் தமிழக அரசுக்கு கோரிக்கை


குறுவை நெல்லுக்கு உள்ளதைப்போல் தென்னைக்கும் தொகுப்பு திட்டம் தமிழக அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2018 4:30 AM IST (Updated: 5 Dec 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

குறுவை நெல்லுக்கு உள்ளதைப்போல் தென்னைக்கும் தொகுப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலை காந்தி சதுக்கத்தில் தமிழக தென்னை விவசாயிகள் சங்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். பட்டுக்கோட்டையில், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் அமைக்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். முருகையன் வரவேற்றார்.

காங்கிரஸ் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன், பண்ணவயல் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாத்தம்பி, அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கர், தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் மணிமுத்து, நகரசபை முன்னாள் தலைவர் ஜவகர்பாபு, விவசாய சங்க தலைவர் தம்பிக்கோட்டை ராமலிங்கம் உள்பட அனைத்துக் கட்சி விவசாயிகள் திரளானோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் ஒட்டு மொத்தமாக 600-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1 கோடி தென்னை மரங்கள் விழுந்து விட்டன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. அரசு அறிவித்துள்ள நிவாரணம், யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பது போல இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் பயிரிட்ட தென்னை மரங்களை நம்பி இருந்த பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறுவை நெல்லுக்கு தொகுப்பு திட்டம் உள்ளதுபோல, தென்னைக்கும் தொகுப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்க வேண்டும். ஒரு தென்னை மரத்துக்கு குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட எல்லா இழப்பீடுகளையும் தமிழக அரசுதான் தர வேண்டும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து தென்னைக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அது அமைய வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய கணக்கெடுப்பு நடத்தி புதிதாக நிவாரணத்தை அரசு அறிவிக்க வேண்டும். எல்லா இழப்பீடுகளையும் தமிழக அரசுதான் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story