கழிவுநீர் சுத்திகரிப்பின்போது: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
குன்னூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பின்போது துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அருவங்காடு ராமசாமி மலை, குப்பை குழி, கேட்டில் பவுண்டு உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க அருவங்காடு- ஜெகதளா சாலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சுத்திகரிப்பு பணி நடைபெறும்போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கழிவுநீர் சுத்திகரிப்பு பணி நடந்தபோது, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நுரை வெளியேறி சாலையில் விழ தொடங்கியது. இந்த நுரை உடல் மீது விழுந்தால் தோல் நோய் வரும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:-
அருவங்காடு- ஜெகதளா சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பின்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குழாயில் பழுது ஏற்பட்டு உள்ளதால், நுரை வெளியேறி சாலையில் விழுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும், நுரை வெளியேறுவதையும் தடுக்க வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story