கோவையில் பொதுமக்களிடம் சிக்கிய: கொள்ளையர்கள் மீது 20 நகை பறிப்பு வழக்குகள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
கோவையில் பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையர்கள் மீது 20 நகை பறிப்பு வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கோவை,
கோவை வெள்ளலூர் பட்டணம் சாலையை சேர்ந்தவர் தமயந்தி (வயது 35). இவர் முல்லை நகரில் நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவருடைய கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கினர்.
அவர்களை போத்தனூர் போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள், சென்னையை சேர்ந்த விஜயராகவன் (25), கார்த்திக் (24) என்பதும், சாய்பாபா காலனியை சேர்ந்த ரமாதேவி (71) என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்துவிட்டு, தமயந்தியிடம் நகை பறிக்க முயன்றபோது சிக்கியது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.300 மற்றும் 4 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விஜயராகவன், கார்த்திக் ஆகியோரும் சிறு வயது முதலே நண்பர் கள். சரியான வேலை கிடைக்காததால் வருமானம் இன்றி சுற்றி உள்ளனர். இதையடுத்து தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிக்கும் செயலில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக நகை பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் 2 பேர் மீதும் சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. அவர்கள் மீது 2 முறை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது. இருவரும் சென்னையில் உள்ள சிறையில் இருந்து கடந்த ஜூலை மாதம் தான் வெளியே வந்துள்ளனர்.
அதன்பின்னர் செலவுக்கு பணம் இல்லாததால் கோவையில் உள்ள தனது நண்பரை தொடர்பு கொண்டு பேசி கோவை வந்தனர். அவர்கள் தங்களின் நண்பரை பார்க்க செல்லும் போதுதான் ரமாதேவியிடம் நகையை பறித்து உள்ளனர். அதற்கு முன்பு வெள்ளலூரை சேர்ந்த பாபு (38) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300 பறித்து உள்ளனர். இதையடுத்து தமயந்தியிடம் நகை பறிக்கும்போது சிக்கி உள்ளனர். இவர்கள் 2 பேரும் கோவை மற்றும் பிற பகுதிகளில் நகை பறிப்பு, திருட்டு, வழிப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா?, அவர்களுடைய நண்பர் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story