கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில்: மரத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை முயற்சி - போலீசார் விசாரணை


கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில்: மரத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை முயற்சி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்ய முயன்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவையை அடுத்த செட்டிபாளையம் பிரிவு தருமராஜ் நகரை சேர்ந்தவர் குன்னிமுகமது. இவரு டைய மனைவி கண்ணம்மாள் என்ற ரம்லத் (வயது 55). மதுக்கரை பேரூராட்சியில் சாலை பணியாளராக பணியாற்றிய குன்னிமுகமது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

அவருக்கு மாதந்தோறும் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஓய்வூதியத்தொகை ரம்லத்துக்கு கிடைக்க வில்லை. இது தொடர்பாக அவர் கடந்த 5 ஆண்டுகளாக கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து வருகிறார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படு கிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் ரம்லத் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, அதிகாரிகளை சந்தித்து தான் கொடுத்த மனு குறித்து கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் சோகத்துடன் கலெக்டர் அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியே வந்தார்.

பின்னர் அவர் அந்த வளாகத்துக்குள் இருக்கும் புளியமரத்தில், தான் கட்டி இருந்த சேலையை அவிழ்த்துக் கட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் விரைந்து செயல்பட்டு அவரை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரம்லத்தை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ரம்லத் கூறியதாவது:-

எனது கணவருக்கு நான் 2-வது மனைவி. முதல் மனைவி இறந்து விட்டார். அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் இறந்ததும், அவருக்கு கிடைத்து வந்த பணப்பலன் மற்றும் ஓய்வூதியத்தொகையை முதல் மனைவியின் குழந்தைகள் வாங்கி வருகிறார்கள். நான் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்கு அந்த ஓய்வூதியத்தொகையை கொடுப்பது தவறு.

எனவே எனது கணவரின் ஓய்வூதியத்தொகையை எனக்கு வழங்கக்கோரி பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு வேறு வருமானமும் கிடையாது. 2 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது கணவரின் ஓய்வூதியத்தொகை எனக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story