நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் நேற்று காலையில் லேசான வெயில் அடித்தது. மதியம் மேகங்கள் திரண்டு வந்து லேசான சாரல் மழை பெய்தது. செங்கோட்டையில் காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்தது. மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது.
இதேபோல் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து லேசான மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் சுமாராக விழுந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கடையம் பகுதியில் லேசான மழை பெய்தது. முக்கூடல், பாப்பாக்குடி பகுதியில் மாலை 4 மணி முதல் 5 மணிவரை பலத்த மழை பெய்தது.
மணிமுத்தாறு அருவி
பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பை, மணிமுத்தாறு பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ஏற்கனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மாலை 5 மணி முதல் 6 மணிவரை பலத்த மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அணைகள்
நேற்று பெய்த மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் குறைந்த அளவே உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 739.35 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 20 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.55 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 368 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 35 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 134.32 அடியாகவும், கடனாநதி அணை 78.80 அடியாகவும், ராமநதி அணை 69 அடியாகவும், கருப்பாநதி அணை 66.87 அடியாகவும் உள்ளது.
Related Tags :
Next Story