சிவன் கோவில்களில் சோமவார விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


சிவன் கோவில்களில் சோமவார விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 4 Dec 2018 10:30 PM GMT (Updated: 4 Dec 2018 8:19 PM GMT)

சிவன் கோவில்களில் சோமவார விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் நேற்று முன்தினம் சோமவார விழா நடைபெற்றது. இதையொட்டி சாமி மற்றும் அம்பாளுக்கு மாவுப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது தா.பழூர் சிவனடியார்கள் தேவாரம், திருவாசக திருமுறைகளை பாடினர். தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றிலும் அகல் விளக்குகளை கொண்டு 1,008 தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரில் புகழ்பெற்ற விருதாம்பிகை உடனுறை விருத்தாசலேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சோமவார விழா நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வெங்கனூர், வேப்பந்தட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Next Story