ஜெயலலிதா நினைவஞ்சலி பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வி.பன்னீர்செல்வம் தனித்தனியாக புகார்


ஜெயலலிதா நினைவஞ்சலி பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வி.பன்னீர்செல்வம் தனித்தனியாக புகார்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:45 AM IST (Updated: 5 Dec 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலியையொட்டி அ.தி.மு.க.வினர் வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவரது 2-வது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், நகர செயலாளர் சார்பில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தரப்பில் திருவண்ணாமலை நகர பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பேனர்களை மர்ம நபர்கள் கிழித்தனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பினரும், வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தரப்பினரும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக புகார் அளித்து உள்ளனர். அதன் பேரில் பேனர்கள் கிழிக்கப்பட்ட இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இடையே உள்ள கோஷ்டி பூசல் காரணமாக இந்த பேனர்கள் கிழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story