2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது பக்தர்கள் தரிசனம்


2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:00 AM IST (Updated: 5 Dec 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 23-ந் தேதி மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்று தீபத்தை தரிசனம் செய்தனர்.

இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் வகையில் தினமும் மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்திற்கு தேவையான நெய் மற்றும் திரி தினமும் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீபத்திற்கு பயன்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவுடன் மகா தீப காட்சி நிறைவடைந்தது. நேற்று அதிகாலை வரை மகா தீபம் எரிந்தது.

இதையடுத்து நேற்று காலை மகா தீப கொப்பரை 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே இறக்கப்பட்டது.

பின்னர் கொப்பரை கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story