கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடன் தவணை வசூலிப்பதை 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடன் தவணை வசூலிப்பதை 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Dec 2018 11:00 PM GMT (Updated: 4 Dec 2018 9:16 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடன் தவணை வசூலிப்பதை 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூடுதல் வங்கிக்கடன் வழங்குவது தொடர்பான மண்டல அளவிலான கலந்தாய்வுக்் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் திருச்சி, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் பெற்றுள்ள கல்விக்கடன், விவசாயக்கடன், சுய உதவிக்குழு கடன், தனிநபர் கடன் போன்ற அனைத்து கடனுக்கான தவணை வசூலிப்பதை 6 மாதத்திற்கு தள்ளிவைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இம்மாவட்டங்களில் உள்ள மகளி்ர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்.

கஜா புயலினால் அழிந்து போன மரங்களை மறுபடியும் உருவாக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். இதனை, வங்கி அதிகாரிகள் கருத்தில் கொண்டு ஒவ்வொரு விவசாயிக்கும் தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பதற்கு நீண்ட கால விவசாய கடன்களை வட்டி இல்லா கடன்களாக வழங்க வேண்டும்.

வீடு இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் முன் கடனாக வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசு வழங்கும் ஊதியத்தொகை உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, மகளிர் மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் பிரவீன்நாயர், திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, எம்.பி.க்கள் டி.ரத்தினவேல், ப.குமார், மருதராஜா, எம்.எல்.ஏக்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story