நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி ஆலோசனை
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து கர்நாடக எம்.பி.க் களுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து கர்நாடக எம்.பி.க் களுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தரும்படி கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இதையொட்டி நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் நோக்கத்தில் கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள் பி.சி.மோகன், சிவராமேகவுடா, உக்ரப்பா, பிரகலாத் ஜோஷி, டி.கே.சுரேஷ் உள்பட அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
15 துறைகள் தொடர்பான...
கூட்டத்தில் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, ரமேஷ் ஜிகஜினகி, அனந்தகுமார் ஹெக்டே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-
“கர்நாடகத்தின் நிலம், நீர், வளர்ச்சி, தொழில், விவசாயம், விமானத்துறை, ராணுவம் உள்பட 15 துறைகள் தொடர்பான திட்டங்கள் அனுமதிக்காக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு அனுமதி கிடைக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
வளர்ச்சி திட்டங்களை...
ராணுவம், நீர்ப்பாசனம் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரிகள், கர்நாடகத்தின் திட்டங்களுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளனர். சிலவற்றுக்கு அனுமதியும் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இங்குள்ள ராணுவத்துறை அதிகாரிகள் தாமதிப்பதால், வளர்ச்சி திட்டங்களை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மந்திரியிடம் எடுத்து கூறி தீர்வு காண வேண்டும்.
ரூ.964 கோடி நிதி
இயற்கை பேரிடர் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியை பெற்றுத்தர வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநில அரசு ரூ.964 கோடி நிதியை செலவு செய்துள்ளது.
அந்தி நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தில் கர்நாடக பிரச்சினைகள் தொடர்பாக குரல் எழுப்ப வேண்டும். இதற்கு வேண்டிய தகவல்கள் வழங்கப்படும்.”
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
மந்திரிகள் குழுவுடன்...
இந்த கூட்டத்தில் பேசிய சில எம்.பி.க்கள், “நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது, சம்பந்தப்பட்ட மந்திரிகள் குழுவுடன் டெல்லிக்கு வந்து மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினால் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்த கூட்டத்தில் சங்கண்ணா, பிரகாஷ் ஹுக்கேரி, கத்திகவுடர், ஆஸ்கர் பெர்ணான்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story