சத்தியமங்கலம் கடையில் தீ விபத்து: கண் பரிசோதனை எந்திரம்– பொருட்கள் எரிந்து நாசம்


சத்தியமங்கலம் கடையில் தீ விபத்து: கண் பரிசோதனை எந்திரம்– பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:00 AM IST (Updated: 5 Dec 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கண் பரிசோதனை எந்திரம்– பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி வீதியை சேர்ந்தவர் ‌ஷமியுல்லா (வயது 44). இவர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் மூக்கு கண்ணாடி (ஆப்டிக்கல்ஸ்) கடை வைத்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை எதிரே உள்ள கடைக்கு டீ குடிக்க ‌ஷமியுல்லா சென்றார். டீக்குடித்துவிட்டு மீண்டும் தனது கடைக்கு வர முற்பட்டார்.

அப்போது அவருடைய கடையில் இருந்து கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பதற்றத்துடன் கடையை நோக்கி ஓடினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையா, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அருகில் இருந்த நகைக்கடைக்கு தீ பரவாதவாறு தடுப்பு நடவடிக்கையிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் நகைக்கடைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ஆனால் நகைக்கடையை கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 1½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மூக்கு கண்ணாடி கடையில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண் பரிசோதனை எந்திரம், மூக்கு கண்ணாடிகள், சோபா செட், நாற்காலிகள் எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்து காரணமாக சத்தியமங்கலம்– கோவை ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்,’ என்றனர். இதுபற்றி சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story