நடத்தையில் சந்தேகப்பட்டு: அக்காளை கொலை செய்த வழக்கில் தம்பி கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு: அக்காளை கொலை செய்த வழக்கில் தம்பி கைது
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு அக்காளை கொலை செய்த வழக்கில் தம்பி கைது செய்யப்பட்டார்.

உப்புக்கோட்டை,

வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 49). விவசாயி. அவருடைய மகள் ஜெயந்தி மாலா (25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவருக்கும் திருமணமாகி பாஸ்டீஸ்வரன் (5) என்ற மகன் உள்ளான். ராமுவுக்கும், ஜெயந்தி மாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனது மகனுடன், பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து ஜெயந்தி மாலா கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் ஜெயந்தி மாலாவின் நடத்தையில் அவருடைய குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஜெயந்தி மாலாவின் தந்தை கருப்பையா, அவருடைய தாயார் பேச்சியம்மாள் (45), தம்பி செல்வக்குமார் (23) ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதியன்று கடப்பாரையால் அடித்தும், கத்தியால் குத்தியும் ஜெயந்தி மாலாவை கொலை செய்தனர்.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையா, பேச்சியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய செல்வக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் வீரபாண்டி பகுதியில் பதுங்கி இருந்த செல்வக்குமாரை, சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story